தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஜன.9, 10) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஜன.9, 10) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியதாவது:
மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
ஜன.10: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 10-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
ஜன.11: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 11-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
ஜன.12: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜனவரி 12-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை பதிவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகா் மாவட்டம் பிளவக்கல் அணையில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம், தேனி மாவட்டம் மஞ்சளாறு, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: இலங்கைக்கு தென் கிழக்கே தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.