ரூ.1,689 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: முதல்வர் ஸ்டாலின்
ரூ.1,689 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூ.1,689 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், திருக்கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக - தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின்படி மாநில அளவில் ஒரு ஆலோசனைக்குழு இந்தத் துறைக்கு அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் குழு 2015-க்குப் பிறகு அமைக்கப்படவில்லை என்ற தகவல். இந்தத் தகவல் என் கவனத்திற்கு நம்முடைய துறையின் அமைச்சர் கொண்டுவந்த நேரத்தில், உடனடியாக அதற்கான பணிகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் அவரிடத்தில் வலியுறுத்தி, வற்புறுத்திச் சொன்னேன். அந்த அடிப்படையில் தான் கடந்த 21-6-2021 அன்று ஆளுநர் ஆற்றிய உரையில், சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஆளுநர் உரையில், இப்படி ஒரு குழு அமைக்கப்படும் என்று அவருடைய அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- கேரளத்தில் புதிய உச்சம்: 46 ஆயிரம் பேருக்கு கரோனா; டிபிஆர் 40%
அந்த அடிப்படையில், 6 ஆண்டு காலமாக நியமிக்கப்படாத இந்தக் குழு – 13 அலுவல் சாரா உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டு அதற்குப் பின்னால் இந்தக்
கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லாம் அரசியல் தொடர்பில்லாத - ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் பொதுநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் நீங்கள். உங்களை எல்லாம் இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்துள்ளதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
மகிழ்ச்சியடைகிற நேரத்தில் நீங்கள் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்ட நேரத்தில் நீங்களும் மனமுவந்து ஒப்புக்கொண்டு இந்தக் குழுவிற்கு பெருமை சேர்த்துத் தந்திருக்கிறீர்கள், இந்த அரசுக்கும் பெருமை சேர்த்துத் தந்திருக்கிறீர்கள். அதற்காக நான் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருக்கின்ற இந்த வேளையில், திமுக அரசு இத்துறையில் கடந்த 8 மாதத்தில் செய்திருக்கக்கூடிய சாதனைகளை ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆனாலும் ஆட்சிக்கு தலைவர் என்ற முறையில் - அவற்றை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படி பகிர்ந்து கொள்வதை என்னுடைய கடமையாகவும் நான் கருதுகிறேன்.
• 725 திருக்கோயில்களுக்கு திருப்பணி வழங்க அனுமதி.
• அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமனம்.
• அன்னைத் தமிழில் அர்ச்சனை.
• ஒருகால பூசைத் திட்டத்திற்கு 1 லட்சமாக இருந்த நிதி 2 லட்சமாக உயர்வு. அத்திட்டத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு முதல் முறையாக- ஊக்கத்
தொகையாக 1000 ரூபாய் வழங்குதல்.
• 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்.
• திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்.
• ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்புள்ள திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு.
• 10 ஆண்டுகளுக்கும் மேல் ஓடாமல் இருந்த சமயபுரம், திருத்தணி கோயில் தங்கரதங்கள் உலா வர நடவடிக்கை.
• திருக்கோயில்களில் உள்ள 65 தங்கத் தேர், 49 வெள்ளித் தேர்களை முறையாக பராமரித்து உலா வருவதற்கான நடவடிக்கை.
• 100 திருக்கோயில்களில் உள்ள நந்தவனங்கள் மேம்படுத்துதல், திருத்தேர் திருப்பணி, திருக்குளப் பராமரிப்பு.
• கரோனா பேரிடர் காலத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், ஒருகால பூசை திட்டத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு 15 வகையான உணவுப் பொருட்கள் மற்றும்
4000 ரூபாய் நிதியுதவி.
• திருக்கோயில்களில் பணியாற்றி- ஓய்வு பெற்ற அர்ச்சகர், ஓதுவார், இசை கலைஞர் ஆகியோருக்கு 1000 ரூபாயாக இருந்த ஓய்வூதியம் 3000 ஆக உயர்வு.
• கிராமக் கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக உயர்வு.
• அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் அகவிலைப்படி உயர்வு, 2000 ரூபாய் பொங்கல் கருணைத் தொகை.
• திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை, பணியாளர்களுக்கு சீருடை.
• கலைஞரின் பிறந்த தினமான 3.6.2021 அன்று இந்த ஆணையர் அலுவலகத்தில் தல மரக்கன்று நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை திருக்கோயில்களில் 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
• கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கிய நிதி 3 கோடியை 6 கோடியாக உயர்த்தி
வழங்கியது.
• புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு 1 கோடி ரூபாய் என்பதை 3 கோடி ரூபாயாக
உயர்த்தி வழங்கியது.
• 10 கல்லூரிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு, 4 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கியது. இதனால் 500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் 1 லட்சம் நிதி 2 லட்சமாக உயர்வு.
• கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிதி 2 லட்சம் ரூபாயாக உயர்வு.
• அன்னதானத் திட்டத்தின் மூலம் கரோனா காலத்தில் - இதுவரை 44 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் சொல்வதற்கு பல சாதனைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தான் உங்களிடம் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திருக்கோயில்களின் பணிகளை மேலும் செம்மையாக எடுத்துச் செல்வதற்கு உங்களின் ஆலோசனைகளை எல்லாம் நிச்சயம் இந்த அரசுக்கு வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது, அந்தக் குழுவின் சார்பில் தான் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.