தமிழ்நாடு

மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை, மணிப்பூர் எல்லையில் வசித்தவர்கள்!

பிரசந்தா மஜும்தார்

மியான்மரில் இரண்டு தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மர் நாட்டையொட்டிய எல்லைப் பகுதி மாநிலமான மணிப்பூரில் உள்ள மோரே என்ற சிறுநகரில் பெருமாள் மகன் மோகன் (28), முருகன் மகன் அய்யனார் (35) என்ற இரு தமிழர்கள் வசித்து வந்தனர்.

மோகன் ஆட்டோ ஓட்டுநராகவும், அய்யனார் சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். மோகனுக்குக் கடந்த ஜூன் 9 ஆம் தேதிதான் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மோரேயிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மியான்மர் நாட்டுக்குள் இருக்கும் டாமு என்ற பகுதியில் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தனர். செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இவர்கள் இருவரையும் மியான்மர் ராணுவம் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று மோரே தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலங்களில் இதுபோன்ற கொலைச் சம்பவங்களில் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

எதிர்பாராத விதமாக இவர்கள் மியான்மர் பகுதிக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். உளவாளிகள் என நினைத்து மியான்மர் ராணுவம் சுட்டுக்கொன்றிருக்கலாம். இந்தப் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு கொலை நடந்துகொண்டுதானிருக்கிறது என்றும் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

ராணுவம் கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்  மியான்மரையொட்டியுள்ள சர்வதேச எல்லையை இந்தியா மூடியுள்ளது. எனினும், எளிதாகக் கடக்கக் கூடிய பகுதி என்பதால் இரண்டு பக்கமிருந்தும் வணிகம், வாழ்வாதாரம், தொழில் போன்றவற்றுக்காக மக்கள் வந்துசெல்வது வழக்கமாக இருக்கிறது என்றும் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் ஒன்றுமறியாதவர்கள், மேரோயிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரும் எதற்காக மியான்மர் பகுதிக்குள் சென்றார்கள் என்று விசாரித்து வருவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மியான்மர் மருத்துவமனையிலுள்ள இருவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர அரசு நிலையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் படுகொலை காரணமாக மோரேயில் பதற்றம் நிலவுகிறது. தகவல் பரவியதும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மோரே நகரில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் வரை வசிக்கிறார்கள். இவர்களுடைய முன்னோர்கள் அனைவரும் 1960-களில் மியான்மரிலுள்ள யாங்கோன் (ரங்கூன்) நகரிலிருந்து இடம் பெயர்ந்துவந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காட்பாடி-திருப்பதி இடையே ரயில்கள் ரத்து: வேளாங்கண்ணி - எழும்பூா் ரயில் நேரம் மாற்றம்

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு!

பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் தனித்து வெற்றி பெறும்: சுதாகா் ரெட்டி நம்பிக்கை

தேனீ வளா்ப்பு: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT