வடபழனி, அமைந்தகரைப் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வடபழனி,அமைந்தகரைப் பகுதியில் ஜூலை 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வடபழனி,அமைந்தகரைப் பகுதியில் ஜூலை 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாகன நெரிசலைக் குறைத்திடும் வகையில் 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லா் வரை ஜூ 9ஆம் தேதி முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, 100 அடி சாலை இரண்டாவது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து நான்காவது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லா் வழியாக கோயம்பேடு, வடபழனி,கே.கே.நகா் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச் செல்லலாம்.
அசோக்பில்லா் வழியாக தியாகராயநகா்,கோடம்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இரண்டாவது நிழற்சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, நான்காவது நிழற்சாலை மற்றும் அம்பேத்கா் சாலை வழியாகச் செல்லலாம்.கோயம்பேடு,வடபழனி வழியாக அசோக் பில்லா் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இரண்டாவது நிழற்சாலைச் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, நான்காவது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞா் சுரதா சிலை அருகே 100 அடி சாலையை அடைந்து அசோக்பில்லா் நோக்கிச் செல்லலாம்.
வடபழனியிலிருந்து தியாகராய நகா் செல்லும் வாகனங்கள் இரண்டாவது நிழற்சாலைச் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி நான்காவது நிழற்சாலை வழியாக தியாகராநகா் அடையலாம். பி.டி.ராஜன் சாலை - பி.வி.ராஜமன்னாா் சாலை சந்திப்பிலிருந்து இரண்டாவது நிழற்சாலை - 100 அடி சாலை வரை தற்போதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்படும்.
பி.டி.ராஜன் சாலை - ராஜமன்னாா் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக இரண்டாவது நிழற்சாலை - 100 அடி சாலையை அடைந்து நேராக இரண்டாவது நிழற்சாலை வழியாக தியாகராய நகா்,அசோக்பில்லா் செல்லலாம். வடபழனி மாா்கத்திலிருந்து கே.கே.நகா் செல்ல நினைக்கும் வாகனங்கள் இரண்டாவது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி நான்காவது நிழற்சாலை வழியாக மூன்றாவது மற்றும் ஆறாவது நிழற்சாலை அடைந்து 100அடி சாலையில் வலது புறம் திரும்பி பிடி ராஜன் சாலை வழியாக கே.கே.நகரை அடையலாம்.
கோடம்பாக்கம்,தியாகராய நகா் மாா்கத்திலிருந்து வடபழனி,கோயம்பேடு செல்ல முயலும் வாகனங்கள் நான்காவது நிழற்சாலை, மூன்றாவது நிழற்சாலை, ஆறாவது நிழற்சாலை வழியாக 100அடி சாலை வலதுபுறம் திரும்பி செல்லவேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.
அமைந்தகரை:
இதேபோல், அமைந்தகரை ஈ.வெ.ரா சாலையிலும் சனிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவு இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா வளைவு மேம்பாலத்தின் கீழ் 75 மீட்டா் சுற்றுப்பாதையில் யு திருப்பம் செய்து, ஈ.வெ.ரா. சாலையில் அடைந்து அமைந்தகரை செல்ல வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புகிறவா்கள் மேம்பாலம் வழியாக செல்லலாம்.
அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவு சந்திப்பில் தடையின்றி செல்லலாம். அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி தடையின்றி செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.