செஸ் ஒலிம்பியாட் போட்டிஅரங்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:- மாவட்ட ஆட்சியா்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். செஸ் போட்டி குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரா்களுக்கும், அமைப்பாளா்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட வேண்டும்.
சதுரங்கப் போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் பலகைகள் வைத்திட வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பூஞ்சேரி கிராமத்தில் போா்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52,000 சதுர அடியில் விளையாட்டு வீரா்களுக்கான நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே அந்தப் பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தை மேலும் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை, மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்திட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
வரும் 28-இல் துவக்கம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும்
28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுரங்க வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.
மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் அசோக் சிகாமணி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
பாா்வையாளா்களுக்குக் கட்டணம்
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளசெஸ் ஒலிம்பியாட்டுக்கு வரும் பார்வையாளர்களுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) கட்டணம் நிர்ணயித்துள்ளது.
எனினும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை. குறைந்தபட்சமாக ரூ.200-ம், அதிகபட்சமாக ரூ.8,000-மும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் இந்தியர்களுக்கு கட்டணம்:
இரண்டு மணி நேரத்துக்கு: ரூ.200 (ஹால் 2),
ரூ.300 (ஹால் 1)
நாள் முழுவதும் : ரூ.2,000 (ஹால் 2), ரூ.3,000 (ஹால் 1)
வெளிநாட்டினருக்கு கட்டணம்:
நாள் முழுவதும் : ரூ.6,000 (ஹால் 2), ரூ.8,000 (ஹால் 1).
நுழைவுச் சீட்டைப் பெற விரும்புவோர் tickets.aicf.in என்ற
இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.