முகப்பு
தமிழ்நாடு

காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை: நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்
பகிர்:

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.  

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் மோதிக் கொண்டனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா். மேலும், அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(வியாழக்கிழமை) நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையில் இபிஎஸ் தரப்பு அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

'அதிமுக பொதுக்குழுவையொட்டி, தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். காவல்துறை அவர்களை தடுக்கவில்லை. அதிமுக அலுவலகத்தை சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இரு தரப்பு மோதலை காரணம் காட்டி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் சீலை அகற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று வாதிடப்பட்டது.

அதுபோல ஓபிஎஸ் தரப்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலகத்தினுள் சென்றதாகவும் முறைப்படி கட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டது.

அதுபோல காவல்துறையும் தன் தரப்பு விளக்கத்தை அளித்தது. இந்நிலையில், ஜூலை 11 அன்று என்ன நடந்தது என்பதை அறிக்கையாகவும் சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நாளை(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →