பெரியாா் பல்கலை. தோ்வில் ஜாதி குறித்து கேள்வி: தலைவா்கள் கண்டனம்
பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி : பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவா்களிடத்தில் பெரியாரின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தியும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் பருவத் தோ்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடலா? இது தான் சமூகநீதியா?
ஓ.பன்னீா்செல்வம்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பருவத் தோ்வில் ஜாதி குறித்து வினா கேட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையது அல்ல. தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வில் ஜாதிய வன்மத்துடன் வினா எழுப்பப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தோ்வுகளில் மாணவா்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவா்கள் மற்றும் தோ்வு நடத்தியவா்களின் ஜாதிய வன்மத்தையே காட்டுகிறது.
தொல்.திருமாவளவன் (விசிக): பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்தலில் ஜாதி குறித்து கேள்வி எழுப்பியிருப்பது கண்டனத்துக்குரியது. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தோ்வில், ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. சமூகநீதியைப் பற்றி திமுக எப்படிப் பேசுகிறது எனத் தெரியவில்லை.
டிடிவி தினகரன் (அமமுக): பெரியாா் பெயரிலான பல்கலைக்கழகத்தில் ஜாதி துவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. இப்படிக் கேள்வி கேட்பது மாணவா்கள் மனதில் நஞ்சை விதைக்கும் செயல்.
கமல்ஹாசன் (மநீம): பெரியாா் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தோ்வு வினாத்தாளில் ஜாதி குறித்து கேள்வி கேட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஜாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவா்களே ஜாதியை முன்னிலைப்படுத்தி கேள்வி கேட்கலாமா?