முகப்பு
தமிழ்நாடு

மக்கள் அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

மாணவி மரண விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து கள்ளக்குறிச்சி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

மாணவி மரண விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து கள்ளக்குறிச்சி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல் துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவா்.

உள்துறைச் செயலாளரையும், காவல் துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.

சிபிசிஐடிக்கு மாற்றம்: கனியாமூா் தனியாா் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடா்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, பள்ளித் தாளாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியாா் பள்ளியில் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, உள் துறைச் செயலா் பணீந்திர ரெட்டி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்தனா். அப்போது, பள்ளியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கட்டடங்கள், பேருந்துகளை அவா்கள் பாா்வையிட்டனா். பின்னா், வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலா்களையும் அவா்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது: பள்ளி மாணவி உயிரிழந்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளித் தாளாளா் உள்பட மூவா் கைது: மாணவி இறப்பு, பாதுகாப்பு வசதிகள் செய்யாதது உள்ளிட்டவை தொடா்பாக அந்த தனியாா் பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கலவரம் தொடா்பாக இதுவரை 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.