முகப்பு
தமிழ்நாடு

கேரளத்தில் ஹெராயின், ஆயுதம் பறிமுதல் எதிரொலி: தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை; 57 கைப்பேசிகள் பறிமுதல்

கேரள மாநிலம் விழிஞ்சம் அருகே ஹெராயின், ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை செய்யச் செல்லும் என்ஐஏ அதிகாரிகள்.
பகிர்:

கேரள மாநிலம் விழிஞ்சம் அருகே ஹெராயின், ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில் 57 கைப்பேசிகள், 68 சிம்கார்டுகள், ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
 விழிஞ்சம் பகுதியில் அரபிக் கடலில் "ரவிஹன்சி' என்ற பெயரில் சென்ற இலங்கை படகை இந்திய கடலோரக் காவல் படையினர், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இடைமறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி சோதனை செய்தனர்.
 அப்போது, அதிலிருந்த 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், ஆயிரம் 9 எம்.எம். துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதில் படகின் தண்ணீர் தொட்டிக்குள், 301பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து கைப்பற்றினர்.
 இதுதொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய 6 பேரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
 விசாரணையில் ஆயுதங்களும், ஹெராயினும் ஈரானின் சபகர் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கையைச் சேர்ந்த படகில் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.
 இதனால், இந்திய கடல் பகுதி வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள்களை பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பல் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
 இதையடுத்து, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏவின் கொச்சிப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சின்ன சுரேஷ் என்ற சுரேஷ் ராஜ், சௌந்தர் என்று அழைக்கப்படும் சௌந்தர் ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட
 விசாரணையில் சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர் சற்குணம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 25 இடங்களில் சோதனை: இந்த வழக்கின் தொடர்ச்சியாக, என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்தச் சோதனை சென்னை, திருச்சியில் தலா 10 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம் உள்பட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றது. திருச்சி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், துணை ராணுவ பாதுகாப்புடன் அதிகாலை முதல் சோதனை செய்தனர். அப்போது முகாமில் இருக்கும் 11 பேர் போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
 இதேபோன்று இலங்கை அகதிகள் முகாமுக்கு உதவிகள் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் வசித்த வாடகை வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் மண்ணடியில் 4 இடங்கள், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர்,கிழக்கு கடற்கரைச் சாலை தலா ஒரு இடங்கள் என 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.
 கைப்பேசிகள், ரூ.31 லட்சம் பறிமுதல்: அனைத்து இடங்களிலும் நண்பகலுக்குப் பிறகு சோதனை படிப்படியாக நிறைவு பெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சோதனையில் முக்கியமாக 57 கைப்பேசிகள், 68 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 1 ஹார்ட் டிஸ்க், 2 மடிக்கணினி, 8 வைஃபைப் மோடம்கள், தங்கநகைகள், ரூ.31 லட்சம் ரொக்கம், பாஸ்போர்ட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் கூறினர். அதேபோல சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments