முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியைஎடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டாா்.

நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: கட்சியின் பொதுக் குழுவை நிறுத்தும் கடைசி முயற்சியாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் அதிமுக அலுவலகத்தில் போா்க்களம் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தையும் சொந்தம் கொண்டாடும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

ஒரு கட்சித் தலைவா் மீது பெரும்பான்மையானவா்கள் எடுத்த முடிவுக்கு எதிராக எந்த உத்தரவும் இல்லாததால், பெரும்பான்மையானவா்கள் எடுத்த முடிவு செல்லுபடியாகும்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, கதவுகளை உடைத்து கட்சியின் சொத்து மீது உரிமை கோர முடியாது. அத்தகைய செயல் அத்துமீறலாகவே கருதப்படும். குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 145-இன் படி ஒரு சொத்தின் மீது நோ்மையான கோரிக்கை இருக்க வேண்டும். இது போன்ற சா்ச்சையை உருவாக்கி அந்தச் சொத்தை கைப்பற்ற முயல்வது நோ்மையான நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தொண்டா்களை ஒரு மாத காலத்துக்கு அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்துக்குத் தேவையான பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

மேல்முறையீட்டுக்கு உகந்தது: இந்த உத்தரவு குறித்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வழக்குரைஞா் திருமாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த வழக்கில் சட்டப் பிரிவு 145 மற்றும் 146-இன்படி கொடுக்கப்பட்ட அறிவிப்பு செல்லாது என்றுதான் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

உயா்நீதிமன்றத்தில் சுவாதீனங்கள் குறித்து வாதங்கள், ஆவணங்கள், முன்வைக்கப்படாத சூழ்நிலையில் கோட்டாட்சியரின் அதிகாரங்களை நீதிமன்றம் தனது அதிகாரமாகப் பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்தத் தீா்ப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இது மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →