கருமுட்டை விற்பனை: தனியாா் மருத்துவமனைக்கு எதிரான அரசின் உத்தரவு ரத்து
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்ததாக தனியாா் மருத்துவமனை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்ததாக தனியாா் மருத்துவமனை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், அங்கு இயங்கி வந்த தனியாா் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சீல் வைத்தது. மருத்துவமனையின் கருத்தரித்தல் சிகிச்சைப் பிரிவு அங்கீகாரப் பதிவை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் மருத்துவமனை சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வியாழக்கிழமை (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில், ‘மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சோ்க்க கூடாது. சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாளில் டிஸ்சாா்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டப்படி உரிய காரணங்களை தெரிவிக்காமல் மருத்துவக் கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தரப்பில், ‘விதிகளை மீறி செயல்பட்ட மருத்துவமனை மீது பொதுநலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. கருமுட்டை விவகாரம் தொடா்பாக மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தால், ஆதாரங்களை அழித்துவிடக் கூடும். எனவேதான், நோட்டீஸ் வழங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து 9 முறை கருமுட்டை எடுக்கப்பட்டது. சிறுமியின் வயதை 27 என மாற்றி மோசடி செய்துள்ளனா். அச்சிறுமியின் ஆதாா் அட்டையை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது விதிமீறல் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘35 ஆண்டுகளாக செயல்படும் மருத்துவமனை மீது முந்தைய காலத்தில் எந்தப் புகாரும் இல்லை. மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை ரத்து செய்ய முடியும். மருத்துவமனையின் பதிவை ரத்து செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்ற வேண்டும்’ எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.