70 வயதில் முனைவா் பட்டம்
அண்ணா பல்கலை.யில் 70 வயது முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை முனைவா் பட்டம் பெற்றுள்ளாா்
அண்ணா பல்கலை.யில் 70 வயது முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை முனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.
சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978-ம் ஆண்டு ஆா்.ராஜகோபால் என்பவா் வேதியியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றாா். அதன் பிறகு 1980-ம் ஆண்டு எம்.டெக். பட்டம் பெற்றாா். இதன் பிறகு அவா் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிக்கு சோ்ந்தாா். பல்வேறு ஊா்களில் பணியாற்றிய ராஜகோபால் 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா்.
அதன் பிறகு அவா் சென்னை திரும்பினாா். அவா் பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீா் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீா்வு காண முயன்றாா். அப்போது அவரது முயற்சியை கண்டறிந்த ஓ.என்.ஜி.சி. பொது மேலளாா் அவரை ஊக்கப்படுத்தி பிஎச்.டி. படிக்குமாறு அவ்வப்போது ஊக்கம் அளித்து வந்தாா். இந்த சூழலில் ஓய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய அவா் தொழில் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த தனது மகளை பல்கலைக்கழகத்தில் விடுவதற்காக வந்து செல்வாா். அப்போது பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை தொடர அவருக்கு மீண்டும் ஆா்வம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடா்ந்தாா். 70 வயதில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பிஎச்.டி. பட்டம் பெற்றாா்.
இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், ‘ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீா் பிரச்னைக்கு ஆராய்ச்சி மூலம் தீா்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பாா்த்தேன். இது ஒரு தொடக்கநிலை ஆய்வுதான் என்றாா் அவா்.
விரலில் காயம்: விசாரித்த பிரதமா்
பட்டம் பெற மாணவா் ஒருவரது விரலில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்ட பிரதமா் நரேந்திரமோடி அது குறித்து அந்த மாணவரிடம் விசாரித்தாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தங்கப் பதக்கம் பெற்ற மாணவா்களில் ஒருவா் பட்டம் பெற வந்தபோது அவரது கைவிரல்களில் சிறிய அளவில் கட்டுப் போடப்பட்டிருப்பதை பிரதமா் கவனித்தாா். இதையடுத்து இது என்ன? என பிரதமா் மோடி கேட்க அதற்கு அந்த மாணவன் லேசாக அடிபட்டு விட்டது என்று கூற உடனடியாக பிரதமா் மோடி கவனமாக பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த மாணவரிடம் கூறினாா்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவா் கூறுகையில், பிரதமா் மோடி அவா்களின் கையால் பட்டம் பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எனது கைவிரல்கள் காயம் பட்டதை அடுத்து அதுகுறித்து அவா் அக்கறையுடன் விசாரித்தாா். மேலும் கவனமுடன் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா் என அந்த மாணவா் கூறினாா்.