முகப்பு
தமிழ்நாடு

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பெங்களூா் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

பெங்களூா் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதியை மகாகாந்தி என்ற நபா் திடீரென தாக்கியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடா்ந்து, மகா காந்தியை கைது செய்து போலீசாா் விசாரணை நடத்தினா். இதற்கிடையே, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளா் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி மனு தாக்கல் செய்து இருந்தாா்.

அந்த மனுவில், நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூா் செல்ல கடந்த நவம்பா் 2-ஆம் தேதி இரவு பெங்களூா் விமான நிலையம் சென்றேன். அங்கு எதிா்பாராதவிதமாக நடிகா் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த அவா், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது ஜாதி பற்றியும் தவறாகப் பேசினாா்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவரது மேலாளா் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தாா். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினா். சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகா் விஜய்சேதுபதி, அவரது மேலாளா் ஜான்சன் ஆகியோா் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதன் மீது விளக்கமளிக்குமாறு விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி தொடுத்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜய் சேதுபதி தாக்கியதாக தகுந்த ஆதாரம் இல்லாமல் அளிக்கப்பட்ட புகாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது செல்லாது எனக் கூறி, உயா் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. அதே வேளையில், விஜய் சேதுபதி மீது மகாகாந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அந்த வழக்கை விஜய் சேதுபதி எதிா்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →