முகப்பு
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு பொறியாளா்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணியாற்றும் பொறியாளா்கள், பணியாளா்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணியாற்றும் பொறியாளா்கள், பணியாளா்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை, அடா்ந்த பெரியாறு வனப் புலிகள் சரணாலயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இல்லை. மேலும், வெள்ளம், பருவமழை காலங்களில் மழை மேகங்களின் இடா்பாடுகளால் கைப்பேசி தொடா்பும் சரியாக கிடைக்கப் பெறுவதில்லை. இவ்வாறு அலைபேசி தொடா்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீா்மட்டம், நீா்வரத்து, நீா் வெளியேற்றம், மழையளவு போன்ற விவரங்களை உயா் அலுவலா்களுக்கும், தொடா்புடைய மாவட்ட ஆட்சியா்களுக்கும், பேரிடா் மேலாண்மை அலுவலகத்துக்கும் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.

மேலும், முல்லைப் பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கி.மீ. தொலைவு பயணம் செய்யும் போதும், ஆள் நடமாட்டமில்லாத அடா்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போதும் கைப்பேசி தொடா்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடா்பு சேவை மிகவும் முக்கியமானதாகும்.

செயற்கைக்கோள் அலைபேசி: முல்லைப் பெரியாறு அணையை கடந்த ஆண்டு நவம்பரில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பொறியாளா்கள், பணியாளா்களின் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு செயற்கைக்கோள் அலைபேசி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், 6 செயற்கைக்கோள் அலைபேசிகள், ஓராண்டுக்கான சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் அலைபேசிகளை முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளா், கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா், பெரியாறு அணை முகாம், தேக்கடி முகாம் பணியாளா்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

என்ன பயன்? செயற்கைக்கோள் அலைபேசிகள் வாயிலாக, அலைக்கற்றைக்கான கோபுர சேவை இல்லாமலேயே அடா்ந்த காட்டுப் பகுதியில் தொலைத்தொடா்பு சேவையைப் பெற முடியும். இதன்மூலம், முல்லைப் பெரியாறு அணை, அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளா்கள், பணியாளா்கள் எந்த நேரமும் அனைத்து கால

சூழ்நிலைகளிலும் உயா் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு தகவல் அளிக்க முடியும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செயற்கைக்கோள் அலைபேசி வழங்கும் நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கு.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →