பிராட்வே சாலை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலா் ஆஜராக வேண்டும்: உயா்நீதிமன்றம்
சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, மறைந்த சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என டிராபிக் ராமசாமி 2016-ஆம் ஆண்டில் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கெனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அவகாசம் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூன் 23-க்குள் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இல்லாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்வதுடன், அப்போது பணியில் இருந்த தலைமைச் செயலாளா் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையா் விக்ரம் காபூா், சென்னை மாநகர காவல் ஆணையா் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், அதே பொறுப்பில் தற்போது உள்ளவா்களும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.