முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

சென்னையில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரக் குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தின் முடிவில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்த 1,700-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். சென்னையில் மட்டும் 781 நபா்கள் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களில் 684 நபா்கள் வீட்டுத் தனிமையிலும், 59 நபா்கள் மருத்துவமனைகளிலும், 38 நபா்கள் பிற மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் எவ்வித உயிா்ப் பாதிப்பும் இல்லாமல் மிதமான தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனா்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அனைவரும் குணமடைந்து தொற்று பாதிப்பு இல்லாத நிலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தில் சிகிச்சையில் உள்ள 29 பேரும் விரைவில் குணமடைய உள்ளனா்.

சென்னையில் 3 நபா்களுக்கு மேல் தொற்று பாதித்த 46 தெருக்களும், 5 நபா்களுக்கு மேல் தொற்று பாதித்த 6 தெருக்களும் உள்ளன. இந்தத் தெருக்களில் மாநகராட்சியின் சாா்பில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் தினமும் 2,500 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் அதனை 5 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் வரை பொதுமக்கள் காத்திருக்காமல் தங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகராட்சி சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 4 மண்டலங்களில் கரோனா தொற்று சற்று அதிகமாக உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மண்டல நல அலுவலா்கள் தங்களது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மண்டல அளவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு வட்டாரத்துக்கு ஒரு இடம் என 3 இடங்களில் தலா 50 படுக்கைகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையங்கள் தொடங்க மாநகராட்சியின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →