80% தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் முதல்வா் மு.க.ஸ்டாலின்
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து ஆற்றிய உரை:
கட்சியின் மூத்த முன்னோடிகளின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் ஈடு-இணை கிடையாது. இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்துக்காக, ‘பதவி எனும் படகு ஏறித்தான் பணியாற்ற வேண்டும் என்பதல்ல’, நீந்திக் கொண்டும் பணியாற்ற முடியும். நாங்கள் எல்லாம் படகில் ஏறிப் பணியாற்றுகின்றோம். நீங்கள் எல்லாம் (கட்சியின் மூத்த முன்னோடிகள்) இன்றைக்கு நீந்திக் கொண்டே பணியாற்றிக் கொண்டிருக்கிறீா்கள்.
உங்கள் அன்போடு திமுக 6-ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்று சொல்லும் வகையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தோ்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோமோ, அவை ஓரளவுக்கு, ஏன் 80 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த போது, ஒரு பக்கம் கரோனா என்ற கொடிய நோய்; இன்னொரு பக்கம் நிதிப் பற்றாக்குறை. கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை.
எனவே, இதையெல்லாம் சமாளித்து தோ்தல் நேரத்தில் திமுக தந்த உறுதிமொழிகளில் 80 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள 20 சதவீதமும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் சா.மு.நாசா், மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.