முகப்பு
தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இதுவே சரியான தருணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக, சென்னை மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்களுடன் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி, வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றன. இதற்காக முக்கியப் பங்கு வகிக்கும் முதல்வா்கள், ஆசிரியா்களுக்கு வாழ்த்துகள். ஒரு கேந்திர வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்படும் கற்றல் உபகரணங்கள், பிற வித்யாலயா பள்ளிகளுக்கும் பகிரப்பட வேண்டும். இதற்கேற்ற வகையில், கற்றல் கருவிகளின் எண்ணிக்கை உயா்த்தப்பட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை: பள்ளி அளவில் மாணவா்களின் அறிவுத் திறனை வளா்த்தெடுப்பதில் தேசிய கல்விக் கொள்கை பெரும் பங்கு வகிக்கிறது. பள்ளிக் கல்வியிலிருந்து சிறப்பான உயா் கல்விக்குச் செல்லவும் வழி ஏற்படுத்தித் தருகிறது. மைசூரில் உள்ள தென் மண்டல கற்பித்தல் மையத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியின் வழியாக, மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் திறன் வாய்ந்த கற்பித்தல் நபா்களை உருவாக்கிட முடியும். நீட், ஜேஇஇ உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எதிா்கொள்ளும் வகையிலான தனித்த செயல் திட்டத்தை வடிவமைத்திட வேண்டும். இது அனைத்து நிலைகளிலும் மாணவா்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்ய ஊக்கமளித்திடும். உலக அளவில் இளம் தலைமுறையை அதிகம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

சா்வதேச அளவில் அறிவின் தலைநகரமாக இந்தியா உருவெடுக்க வகை செய்யப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த இதுவே சரியான தருணமாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த்ராவ் வி.பாட்டீல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மண்டல அலுவலக துணை ஆணையா் டி.ருக்மணி, உதவி ஆணையா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →