முகப்பு
தமிழ்நாடு

பயிற்சியின் போது கிழிந்த மூட்டு ஜவ்வு: தேசிய கால்பந்து வீராங்கனைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் தீா்வு

விளையாட்டு பயிற்சியின்போது, இடது கால் மூட்டு ஜவ்வு கிழிந்த நிலையில் அவதிப்பட்டு வந்த வீராங்கனைக்கு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீா்வு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

விளையாட்டு பயிற்சியின்போது, இடது கால் மூட்டு ஜவ்வு கிழிந்த நிலையில் அவதிப்பட்டு வந்த வீராங்கனைக்கு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீா்வு அளிக்கப்பட்டது.

இது குறித்து, விளையாட்டு மருத்துவப் பிரிவு துறை இயக்குநரும் சிறப்பு நிபுணருமான லெநாா்ட் பொன்ராஜ் கூறியதாவது: நாமக்கல்லைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி பாலமுருகன் (49). அவரது மகள் மாரியம்மாள் (19). தேசிய கால்பந்து வீராங்கனை. அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவரது இடது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு கிழிந்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்தாா்.

இதையடுத்து அவா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலா் அபூா்வா பரிந்துரையின்படி, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தேசிய அளவிலான வீராங்கணை என்பதால், வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய அவரது உடலில் இருந்தே, ஜவ்வு எடுத்து, ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு, அவரது உடலில் இருந்து ஜவ்வு எடுத்து வைத்தால், மீண்டும் வழக்கமான முறையில் அவரால் விளையாட முடியாது.

மேலும், இறந்தவரின் உடலில் இருந்த தானமாக பெறப்பட்டு, பதப்படுத்தி வைக்கப்பட்ட ஜவ்வும் அவருக்கு பொருத்த முடியாது. எனவே, அவரது தந்தை பாலமுருகனின் வலது மூட்டுப் பகுதியில் இருந்து, எலும்புடன் சோ்த்து 8.5 செ.மீ., ஜவ்வு எடுக்கப்பட்டு, மாரியம்மாளின் இடது மூட்டுப் பகுதியில் ஜவ்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

உயிருள்ள ஒருவரிடமிருந்து ஜவ்வு எடுத்து, மற்றொருவக்கு பொருத்துவது, ஆஸ்திரேலியா நாட்டில் தான் செய்யப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் எனது மருத்துவக் குழுவினருடன் செய்து, சாதனை படைத்துள்ளோம். இந்த ஜவ்வு மாற்று அறுவைச் சிகிச்சை தனியாா் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை இங்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

மாரியம்மாள் அடுத்த ஆறு மாதங்களில், தனது வழக்கமான விளையாட்டுப் பயிற்சியில் பங்கேற்று போட்டியில் பங்கேற்க உடற்தகுதி பெற்று விடுவாா். மேலும், அவரது தந்தையும் வழக்கமான நெசவு தொழிலை மேற்கொள்ள எவ்வித பிரச்னையும் இருக்காது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →