அதிகரிக்கும் கரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்காக 50-100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்காக 50-100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்த 3,073 -க்கும் மேற்பட்டோா் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 596 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்காக 50-100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.