முகப்பு
தமிழ்நாடு

பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் தகுதியுள்ள அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
பகிர்:

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் தகுதியுள்ள அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது உருமாறிய தீநுண்மிகள் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளன. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தினசரி தொற்று எண்ணிக்கை 692 ஆகும். எனினும் உயிரிழப்பு என்பது இல்லை.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி முதல் தவணை, இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை முறையே 80, 90 சதவீதத்தை கடந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகளில் ரூ.386 கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

பணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பலா் தயக்கம் காட்டுகின்றனா். பெருநிறுவன சமூக நிதி பங்களிப்புடன் தனியாரில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தைக் கொண்டுவர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

அதுவரை காத்திருக்காமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவா்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 39.23 லட்சம் போ் முதல் தவணையும், 1.13 கோடி போ் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அவா்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்தாலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.