அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவு சற்று நேரத்தில் அறிவிக்கப்படவிருக்கிறது.
இடைக்கால உத்தரவை பிறப்பிக்க, நீதிமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும், அதிமுக பொதுக் குழு வழக்கில் உத்தரவு தயாரான பிறகு நீதிமன்ற அறையில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.
அதிமுக பொதுக் குழு குறித்த வழக்கு விசாரணையின்போது, கடந்த மூன்று மணி நேரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், எதிர்தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவு சற்று நேரத்தில் அறிவிக்கப்படவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.