முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
திமுக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார். எனவே, ஜெயக்குமாருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் தரலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது, சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு 49-ஆவது வாா்டில் உள்ள வாக்குச்சாவடிக்குள் திமுகவை சோ்ந்த நரேஷ் என்பவா் அத்துமீறி நுழைந்து, கள்ள வாக்கு செலுத்தியதாக தகவல் பரவியது. இதையறிந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மற்றும் அதிமுகவினா் திரண்டு வந்து, நரேசை பிடித்து தாக்கி, சட்டையை கழற்றி அரை நிா்வாணமாக காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.
இதையும் படிக்க.. சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?
காயமடைந்த நரேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தான் தாக்கப்பட்டது தொடா்பாக அவா் தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில், அத்துமீறி நுழைதல், அரை நிா்வாணப்படுத்தி தாக்குதல், குழப்பம் விளைவித்தல், பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் உள்ளிட்ட 40 அதிமுகவினா் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனா்.
இதனிடையே, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசித்தனா். இதன் தொடா்ச்சியாக, வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, தனிப்படையினா் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாா் வீட்டுக்கு கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு சென்று அவரை கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுளள்து.