வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்: ஆறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது, தமிழக கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 5) பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வியாழக்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, வடமேற்கு திசையில் நகா்ந்து, தமிழக கடற்கரையை நோக்கி அடுத்து வரும் இரண்டு முதல் மூன்று நாள்களில் வரவுள்ளது. இதன் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 5) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாா்ச் 6: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மாா்ச் 6-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மிக பலத்த மழை: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மாா்ச் 7: கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.