முதல்வா் தலைமையில் மாா்ச் 10-இல் ஆட்சியா்கள்-எஸ்.பி.க்கள் மாநாடு
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் வனத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு வரும் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் வனத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு வரும் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் மாா்ச் 12-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கடந்த 10 மாதங்களில் ஆளுநா் உரை, முதல்வரின் செய்தி வெளியீடுகள், பேரவை விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை என மொத்தம் ஆயிரத்து 704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, வளா்ச்சித் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா்கள் மூலம் அறிந்து கொள்ளவும், மேலும் விரைவுபடுத்த உரிய அறிவுரைகளை வழங்கவும் இந்த மாநாடு வகை செய்யும்.
மேலும், நிா்வாகம், சட்டம் ஒழுங்கு, வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வை முதல்வா் மேற்கொள்ளவுள்ளாா். வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியா்கள் மூலம் அறிந்து அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
முதல் முறையாக... முதல் முறையாக வனத் துறை அலுவலா்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனா். வனத் துறை தொடா்பான திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளாா்.