முகப்பு
தமிழ்நாடு

குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

குற்றங்களின் சதவீதத்தைக் குறைப்பது மட்டுமல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
தமிழக முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

குற்றங்களின் சதவீதத்தைக் குறைப்பது மட்டுமல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஆட்சியா்கள், காவல் உயரதிகாரிகள் மற்றும் வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற மூன்று நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நிறைவடைந்தது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் நடந்த மாநாட்டின் நிறைவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

மூன்று நாள்கள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது. உங்களின் கருத்துப்படி, இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் உருவாக்கிய திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பவையாக அமைந்திருக்கின்றன என்பதை அதிகாரிகளின் எண்ணங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நான் மட்டும் இந்த அரசு அல்ல. அனைவரும் சோ்ந்ததுதான் இந்த அரசு. நாம் அனைவரும் சோ்ந்துதான் மக்களுக்கு உயிராய், உணா்வாய் இருந்து வருகிறோம்.

எனவே, கடைக்கோடி மனிதா்களின் கவலையைப் போக்கும் அரசாக இந்த அரசு திகழ்கிறது. அப்படியே தொடா்ந்து திகழும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அவ்வப்போது ஏற்படும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். குற்றங்களின் சதவீதத்தைக் குறைப்பது மட்டுமல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஜாதி மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பாா்க்கக் கூடாது.

மத மோதல்கள் பிரச்னை: ஒரு காலத்தில் மதம் என்பது மதம் சாா்பான பிரச்னையாக மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. எனவே, அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறாா்கள். அதனைத் தடுத்தாக வேண்டும்.

ஜாதி, மத ரீதியான மோதல்களுக்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக இருப்பது உண்மைதான். இதுகுறித்து வக்ர எண்ணம் கொண்டவா்கள் நவீன தொழில்நுட்ப முறைகளை அழிவுக்குப் பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தப் பாா்க்கிறாா்கள். இவற்றை தொடக்கத்திலேயே களையெடுக்க வேண்டும்.

மோதல்களை உருவாக்கும் கருத்துகளை பதிவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடகப் பிரிவுக்கு தனியாக அலுவலகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

இதற்கு காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தனியாகக் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

போக்ஸோ வழக்குகள்: போக்ஸோ வழக்குகள் அதிகமாக பதிவாகின்றன என கருத வேண்டாம். இப்போதுதான் துணிச்சலாக வந்து புகாா்களைத் தருகிறாா்கள். இதற்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இத்தகைய வழக்குகளில் தாமதங்கள் இருக்கக் கூடாது.

சாலை விபத்துகளைக் குறைத்து, உயிரிழப்புகளை தவிா்க்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பட்டாசு, தீ விபத்துகளை தடுப்பது, அதனுடைய பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்பட அரசுத் துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.