தமிழ்நாடு

ரூ. 5,000 கோடி முதலீட்டில் தரமணியில் ஐ.டி. வளாகம்: முதல்வர் அடிக்கல் நாட்டல்

DIN

சென்னை தரமணியில் மிகப்பெரிய ஐ.டி. வளாகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 

சென்னை டி.எல்.எப். டௌன்டவுன் தரமணியில் அமையவுள்ள ஐ.டி. வளாகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வழியாக அடிக்கல் நாட்டினார். 

டி.எல்.எப். டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல்  பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகம் ரூ. 5,000 கோடி முதலீட்டில் 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 

இந்த டௌன்டவுன் திட்டமானது, சுமார் 70,000-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.3.2022) டி.எல்.எப் டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.

5000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், டி.எல்.எப் நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.

இந்த டி.எல்.எப். டௌன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், பிரத்யேக உணவுக்கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது.

இவ்வளாகக் கட்டடம் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், சமூகக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.

மேற்சொன்ன இத்தனித்துவமான வளாகத்தில் 1 மில்லியன் சதுரஅடி பரப்பளவுள்ள கட்டடத்தில், ஏறக்குறைய 7.7 லட்சம் சதுரஅடி பரப்பு அமைவிடத்திற்கு, டிட்கோ டி.எல்.எப் கூட்டுமுயற்சி நிறுவனம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

செயல்படுத்தப்பட்டு வரும் இந்த டௌன்டவுன் திட்டமானது, சுமார் 70,000-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும். இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல் திட்டங்கள், ஒரு டிரில்லியன் SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் 
க. பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், இ.ஆ.ப., டிட்கோ செயல் இயக்குநர் திருமதி வந்தனா கர்க், இ.ஆ.ப., டி.எல்.எப் ரெண்டல் பிசினஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ஸ்ரீராம் கத்தார், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர்  சதீஷ் கோபி, டி.எல்.எப் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT