தமிழ்நாடு

பட்ஜெட்: தொல்லியல் துறையில் புரட்சி.. 7 இடங்களில் அகழாய்வு; 2 இடங்களில் கள ஆய்வு

DIN

ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது.

மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும்  பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாண்டு,விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம்மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும்பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT