தனியாா் பள்ளிகளில் தமிழ்வழி மாணவா்களுக்கு இலவச பாடநூல், நோட்டுப் புத்தகங்கள்
தனியாா் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை இலவச பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.
தனியாா் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை இலவச பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவா்களுக்கு, இந்த ஆண்டு முதல் ரூ.15 கோடியில் வழங்கப்படும்.
அகழாய்வுக்கு ரூ.5 கோடி: மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கா்பட்டி, விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உள்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
இடைச் சங்க கால பாண்டியா்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினைக் கண்டறிவதற்கு இந்திய கடல்சாா் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சாா் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் அருங்காட்சியகம்: நடப்பாண்டில் விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினா் அகழ்வைப்பகம், திருவள்ளூா் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள பழைமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு நடப்பாண்டில் சிறப்பு ஒதுக்கீடாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் வளா்ச்சித் துறைக்கு ரூ. 82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.