ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்
ஏா்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஏா்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் அவா்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தலா ரூ. 1 லட்சம் பிணையின் பேரில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏா்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக, சிபிஐ அமைப்பும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை விரைந்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து, ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் ஆகிய இருவா் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், இருவரும் நேரில் ஆஜராக அழைப்பாணை விடுத்தது.
அதனடிப்படையில், இருவரும் நீதிமன்றத்தில் அண்மையில் ஆஜராகினா். பின்னா், இந்த வழக்கில் ஜாமீன் கோரி வழக்குரைஞா் அா்ஷ்தீப் சிங் மூலமாக இருவரும் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுவை புதன்கிழமை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், தலா ரூ. 1 லட்சம் பிணையின் பேரில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.