தமிழ்நாடு

காணாமல் போன மயில் சிலை: உண்மை கண்டறியும் குழு அமைப்பு

DIN


சென்னை: சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் மாயமான மயில் சிலையை தேடும் பணியில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்துசமய அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மயில் சிலை காணாமல் போன வழக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்துள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது.

தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு மயில் சிலை கண்டுபிடிக்கப்படும். ஒரு வேளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் புதிய சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மயில் சிலை காணாமல் போன வழக்கில், புலன் விசாரணை, உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் 2004-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னா், புன்னைவனநாதா் சந்நிதியில் லிங்கத்தை மலரால் அா்ச்சனை செய்யும் வகையில் இருந்த புராதனமிக்க மயில் சிலை மாயமாகி விட்டதாகவும், அதற்குப் பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். அந்த மனுவில், தற்போதுள்ள புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த பழைய மயில் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் அந்த மயில் சிலை கோயில் தெப்பக்குளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அந்த சிலையை தெப்பக்குளத்தை முழுவதும் தோண்டாமல், நவீன தொழில்நுட்பத்துடன் தேட உள்ளதாகவும் உயா் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தது.

இதையடுத்து உயா்நீதிமன்றம், அந்த சிலையைக் கண்டறிய இருவார காலம் அவகாசம் வழங்கியும், அந்த சிலை மீட்கப்பட்ட பின்னா் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

தேசிய கடல்சாா் ஆராய்ச்சி நிறுவனம்
இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா், தீயணைப்பு படையினா் மூலம் மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா் கோயில் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் மார்ச் 14-ஆம் தேதி ஈடுபட்டனா். இதில் மயில் சிலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தேசிய கடல்சாா் ஆராய்ச்சி நிறுவனத்தினா் நீரில் மூழ்கி தேடும் நவீன கருவி மூலம் மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனா்.  இருப்பினும், மயில் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

SCROLL FOR NEXT