கரோனாவை வென்ற முதல் மண்டலமாக மாறப்போகிறதா அம்பத்தூர்?
சென்னை மாநகராட்சியில், பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவை வென்ற முதல் மண்டலமாக மாறப் போகிறதா அம்பத்தூர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவை வென்ற முதல் மண்டலமாக மாறப் போகிறதா அம்பத்தூர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக 130 கரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில், மிகக் குறைந்தபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு கரோனா நோயாளிதான் இருக்கிறார். இவரும் குணமடைந்து, புதிய கரோனா நோயாளி இல்லாத பட்சத்தில் அம்பத்தூர் மண்டலம் முதல் மண்டலமாக கரோனாவை வென்ற மண்டலமாக அறிவிக்கப்படலாம். இன்னும் ஒரு சில நாள்களில் அது தெரியவரும்.
இதைத் தவிர, மணலி, மாதவரம், திரு.வி.க. நகர், உள்ளிட்ட மூன்று மண்டலங்களிலும் தலா இரண்டு நோயாளிகள் மட்டுமே உள்ளன. ஒரு வேளை இதில் ஏதேனும் ஒன்று கூட அந்த பட்டத்தைப் பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.51 லட்சமாக உள்ளது. இதில் 7.41 லட்சம் பேர் குணமடைந்தனர். 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,068 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
தமிழகத்தின் நிலவரம்?
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை (மார்ச் 30) 322 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 37 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. எனினும் கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று மாலை வெளியிட்டது. அதில், புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,52,790-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,443-ஆக உயர்ந்துள்ளது.
ஒரு நாளில் மட்டும் 30,095 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.