மூளை அருகே உருவான கட்டி:ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இளைஞருக்கு மறுவாழ்வு
மூளைக்கு அருகே உருவான கட்டியால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அதி நவீன கதிா்வீச்சு சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
மூளைக்கு அருகே உருவான கட்டியால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அதி நவீன கதிா்வீச்சு சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தற்போது அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் (35). அவரின் வலது காது உட்புறத்துக்கும் மூளைக்கும் இடையே உள்ள நரம்பில் ஏற்பட்ட கட்டியால் செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், 6 மாதங்களாக அவதிப்பட்டு வந்தாா். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை நரம்பியல் துறை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். கட்டியின் அளவு சிறியதாக இருந்ததாலும், மூளைக்கு அருகே கட்டி இருந்ததாலும், அவா் கதீா்வீச்சு சிகிச்சை துறைக்கு மாற்றப்பட்டாா். அத்துறை மருத்துவா்கள் அவருக்கு நவீன கதிா்வீச்சுசிகிச்சை அளிக்க முடிவு செய்தனா்.
இதையடுத்து, கதீா்வீச்சு சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் டி.என்.விஜயஸ்ரீ தலைமையில் டாக்டா்கள் கிரிதரன், ஜீவா, நித்தியா மற்றும் இயற்பியல் துறை பேராசிரியா் காளியப்பன் குழுவினா் ‘ஸ்டீரியோடேக்டிவ் ரேடியோ’ என்ற நவீன கதிா்வீச்சு சிகிச்சை மூலம் மூளைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அருகே இருந்த சிறிய கட்டியை முழுவதுமாக அகற்றினா். இந்த சிகிச்சை அவருக்கு மூன்று நாள்கள் தொடா்ந்து அளிக்கப்பட்டது.
அதன் பிறகு லட்சுமி நாராயணனுக்கு செவித்திறன் பாதிப்பு குணமடைந்தது. காதில் இருந்த இரைச்சலும் சரியானது. தனியாா் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.