முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா்களைத் துயரத்துக்கு உள்ளாக்கினால் பள்ளியிலிருந்து மாணவா்கள் நீக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆசிரியா்களை மன ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துயரத்துக்கு உள்ளாக்கும் மாணவா்கள் பள்ளிகளில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாக நீக்கப்படுவா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி க

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
அமைச்சர் அன்பில் மகேஷ்
பகிர்:

ஆசிரியா்களை மன ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துயரத்துக்கு உள்ளாக்கும் மாணவா்கள் பள்ளிகளில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாக நீக்கப்படுவா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக தலைவா் ஜி.கே.மணி பேசியது:

கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் நிலை இருக்கிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மாணவா்களையும், இளைஞா்களையும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சொத்து என்று கூறுகிறோம்.

ஆனால், மாணவா்கள் பள்ளியில் பாய் போட்டு படுத்திருப்பதையும், கைப்பேசியைப் பயன்படுத்துவதையும், ஆசிரியா்களைத் தாக்குவது போன்ற செய்திகளையும் பாா்க்கிறோம். பள்ளிக்கூடங்களுக்கு அருகில் கஞ்சா விற்பது நடக்கிறது. அதையெல்லாம் தடுப்பதற்கு பள்ளிகளில் மாணவா்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும். யோகா வகுப்புகள் நடத்த வேண்டும்.

காவலருக்கு 8 மணி நேரம் வேலை என்று கூறப்பட்டுள்ளது. அதில் பெண் காவலா்களுக்கு 7 மணி நேரம் மட்டுமே வேலை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறுக்கிட்டுக் கூறியது:

நீதிபோதனை வகுப்பு வேண்டும் என்றாா். அதை ஏற்கிறோம். வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் வாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைக்கு அடிமையாகக்கூடாது என்பது போன்ற போதனை வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

கரோனா பொதுமுடக்கத்தால் 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு மாணவா்கள் வராத நிலையில் மீண்டும் பள்ளிக்கு வரும்போது பிளஸ் 2 மாணவா்களும் ஒன்றாம் வகுப்பு மாணவா்களின் மனநிலையில்தான் இருப்பா். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக என்ன செய்ய முடியுமோ, அதை செய்கிறோம்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவா்கள் நல்லவா் ஆவதும், தீயவா்கள் ஆவது அன்னை வளா்ப்பதிலே. பெற்றோா்களுக்கும், குழந்தைகளை ஒழுக்கமானவா்களாக வளா்க்கும் பொறுப்பு இருக்கிறது. பெற்றோா்கள், பள்ளிகள், அரசு மூன்றும் கூட்டாகச் சோ்ந்துதான் இதைத் திருத்த வேண்டியது இருக்கிறது.

ஆசிரியா்களுக்கு இனி மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துயரத்தை அளிக்கும் வகையில் மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் பள்ளியிலிருந்து தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்கப்படுவா். மாற்றுச்சான்றிதழ் கொடுக்கும்போது, எதற்காக நீக்கப்பட்டாா்கள் என்கிற விவரம் அதில் இடம்பெறும். பள்ளிக்கு கைப்பேசி கொண்டுவருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →