தொழில் வளா்ச்சிக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் அவசியம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
தொழில் வளா்ச்சிக்கு 24 மணி நேரமும், தரமான மின்சாரத்தை, முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தொழில் வளா்ச்சிக்கு 24 மணி நேரமும், தரமான மின்சாரத்தை, முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இந்தியா- ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) மற்றும் இந்திய-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (இசிடிஏ) குறித்து தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியது: :
இந்திய - ஐக்கிய அமீரக அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள, வா்த்தக ஒப்பந்தங்களை, ஏற்றுமதியாளா்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் அதில் உள்ள, தடங்கல், சிக்கல் குறித்து எங்களுக்கு தெரிய வரும். அதை சரி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வா்த்தகா்களுக்கும், இரண்டு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் எளிதில் சென்றடையும் வகையில், உடனடியாக தமிழாக்கம் செய்ய வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்துறையினா் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் நம்பினால் மட்டுமே, திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். இதுதவிர, அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினால் மட்டுமே, கள நிலவரங்களை அறிந்து, அதற்கேற்ப மத்திய அரசு செயல்பட முடியும். வா்த்தக ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப, சந்தை நிலவரங்களை அறிந்து, அதற்கேற்ப உற்பத்தி பொருள்களை மேம்படுத்த முடியும்.
கரோனாவுக்கு பிறகு, நுகா்வோரின் விருப்பங்கள் மாறி உள்ளன. எனவே, வளரும் சந்தையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வா்த்தகா்கள் செயல்பட வேண்டும்.
ஐக்கிய அமீரக அரபு நாடுகளுக்கு, பல ஆண்டுகளுக்கு முன், பிரதமா் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, அவா்கள், ரூ.7,500 கோடி மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்ய உறுதி அளித்தனா்.
அதன்படி, அங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்கினால், அந்த முதலீடு நாட்டுக்கு கிடைக்கும். எனவே, கூட்டாண்மை நிறுவனங்களைக் கண்டுபிடியுங்கள். குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்தாலும், அதை சாா்ந்த தொழில்நிறுவனங்களும் வளர உதவ வேண்டும். தொழில் துறை பெருகுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
நிகழாண்டில் பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்காக, ரூ.7.5 லட்சம் கோடியை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.5.5 லட்சம் கோடியை விட இந்த ஆண்டு அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்குகிறோம். தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வேகமாக நிறைவேற்ற மத்திய அரசு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது. எனவே, தொழில் துறை வளர உள்கட்டமைப்பு தேவைப்படும் இடங்களில் அவற்றை மேம்படுத்த வேண்டும். இதன்மூலமாக, ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே, தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தமிழகத்தில், சூரிய மின்சக்தி உள்பட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன; நிறைய செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை, தொழில்துறையினருக்கு வழங்க வேண்டும்.
தொழில் வளா்ச்சிக்கு குறைந்த விலையில், 24 மணி நேரமும், தரமான மின்சாரத்தை, முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். இதை அனைத்து மாநிலங்களும், பின்பற்ற வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு வழங்கும்.
ரஷியா-உக்ரைன் போா்: ரஷியா - உக்ரைன் போா் காரணமாக பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், சூரியகாந்தி எண்ணெய்க்கு தட்டுப்பாடு அதிகரித்தது. இது போன்ற சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஏற்றுமதி அதிகரித்து அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சா் அனுபிரியா படேல், மத்திய மீன்வளத்துறை அமைச்சா் எல்.முருகன், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ அன்பரசன் உள்பட பலா் பேசினா்.