பஞ்சு, நூல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக நெசவாளர் அணி
பஞ்சு மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சு மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பஞ்சு மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் கரூர், திருப்பூர், கோவை மற்றும் ஈரோட்டில் பின்னலாடைத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் 18 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ நூலின் விலை ரூ.200/- என்று இருந்தது. தற்போது அந்த விலைக்கு அரை கிலோ நூல்தான் வாங்க முடிகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையை 11 விழுக்காடு மத்திய அரசு குறைப்பதாகச் சொல்லியும் விலை குறையவில்லை. மேலும் பன்னாட்டுச் சந்தையில் 16 விழுக்காட்டிற்கு மேல் வரி உயர்ந்து விட்டது.
இதையும் படிக்க- குளத்தில் துணி துவைக்க சென்றபோது நேர்ந்த சோகம்: 5 பெண்கள் பலி
பின்னலாடைத் தொழிலில் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி மற்றும் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடந்த 18 மாதங்களாக நூல் விலை உயர்ந்து உள்ளது. இந்நிலையில் நேற்று கிலோவிற்கு ரூ.30/- நூல் விலை உயர்வு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது 20 கவுண்ட் கோம்டு வகை நூல் வரி நீங்கலாக கிலோ ரூ.362/-க்கும், 24 கவுண்ட் ரூ.372/-க்கும், 30 கவுண்ட் ரூ.382/-க்கும், 34 கவுண்ட் ரூ.395/-க்கும், 40 கவுண்ட் ரூ.415/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தபோது பன்னாட்டு நிறுவனங்களிடம் 25 லட்சம் பேல் பருத்தியும், வணிகர்களிடம் 10 லட்சம் பேல் பருத்தியும் இருப்பு இருந்தது. இதை உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டவே மத்திய அரசு முயற்சி செய்கிறது.
எனவே உள்நாட்டு நூல் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம்வரை அல்லது நிலைமை சீராகும்வரை பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
சந்தைக்குப் புதிய பருத்தி விற்பனைக்கு வந்தாலும் தேவைக்குப் போக மீதமாகும் பருத்தி மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும். இடைத்தரகர்களுக்கு விற்கக் கூடாது.
இதன்மேல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். மேலும் ஜவுளித் தொழில் அழிவுப்பாதைக்குச் சென்றுவிடும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
1. பருத்தியை அத்தியாவசியப் பட்டியலில் கொண்டுவர வேண்டும்.
2. நூல் மில்கள் மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட விழுக்காடு மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
3. சிசிஐயிடம் ஒரு பேல் ரூ.44 ஆயிரத்திற்குப் பஞ்சு வாங்கி நூல் மில்களுக்கு ரூ.95 ஆயிரத்திற்கு விற்க்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
4. எனவே உடனடியாக மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும்.
5. வெளிநாட்டுக்குப் பஞ்சு ஏற்றுமதியைத் தடை விதிக்க வேண்டும்.
6. நூல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
7. உள்நாட்டுத் தேவை போக மீதம் உள்ள பஞ்சு ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு வரைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நூல் விலையைக் குறைத்து ஜவுளித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும், இதில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதுடன் தமிழ்நாடு முதல்வரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசும் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.