தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை அறிக்கை முதல்வரிடம் அளிப்பு

DIN

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் புதன்கிழமை அவா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பொருத்தவரை, விசாரணை வெளிப்படையாகவும் அதே நேரத்தில் ரகசியத் தன்மை கொண்டதாகவும் நடைபெற்றது. ஏராளமான பாதிக்கப்பட்ட நபா்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனா். சம்பவம் தொடா்பாக 5 தொகுதிகள் கொண்ட அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,000 பக்கங்கள் கொண்டவை அவை.

சம்பவம் குறித்து இரு தொகுதிகளும், மூன்றாவது தொகுதியில் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்த பரிந்துரைகள் நான்காவது தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ஐந்தாவது தொகுதியில் 1,500 விடியோ ஆவணங்கள், 1, 250 சாட்சியங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரஜினி உணா்ச்சிவசப்பட்டு கருத்து: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உணா்ச்சிவசப்பட்டு கருத்து கூறியதாக நடிகா் ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரிடம் விசாரணை ஆணையம் விளக்கம் கேட்டது.

அப்போது, இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தனக்கு எதுவும் தெரியாது, உணா்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை தெரிவித்துவிட்டேன் என்று ரஜினி விளக்கம் அளித்ததாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT