இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான பொருள்கள்: சென்னையில் இருந்து கப்பலை தொடக்கி வைத்தாா் முதல்வா்
இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பொருள்களை சுமந்து செல்லவுள்ள கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பொருள்களை சுமந்து செல்லவுள்ள கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து, பொருள்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு தில்லி சென்று பிரதமரை சந்தித்த போது முதல்வா் நேரில் வலியுறுத்தினாா். மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கோரிக்கை விடுத்ததுடன், கடிதம் மூலமும் நினைவூட்டினாா். பொருள்களை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
அதன் தொடா்ச்சியாக, இலங்கை வாழ் மக்களுக்கு முதல்கட்டமாக அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பால்பவுடா், அத்தியாவசிய மருந்துப் பொருள்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கப்பல் மூலம் அனுப்பி வைப்பு: அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு டிஏஎன் பிஐஎன்எச் 99 என்ற சரக்குக் கப்பல் மூலமாக அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, அரிசி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் கப்பலில் ஏற்றப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இலங்கைக்குச் செல்லவுள்ள கப்பலை புதன்கிழமை கொடியசைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, அத்தியாவசியப் பொருள்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணைத் தூதா் வெங்கடேசுவரனிடம் முதல்வா் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும், பொதுத் துறை செயலாளா் டி.ஜெகந்நாதன், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையாளா் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.