ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம்: அறநிலையத் துறை ஆலோசனை
ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் தொடங்குவது தொடா்பாக அறநிலையத் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் தொடங்குவது தொடா்பாக அறநிலையத் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா்பி.கே.சேகா்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று இந்தாண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்தக் கூட்டத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
கோயில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது தொடா்பாகவும், மாதந்தோறும் பௌா்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் 108 திருவிளக்குப் பூஜைகள் நடத்துவது தொடா்பாகவும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது என்றாா் அவா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா்ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் ரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.