நங்கநல்லூா் ஆஞ்சநேயா் கோயிலில் திருக்குடமுழுக்கு
சென்னை நங்கநல்லூா் அருள்மிகு பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை நங்கநல்லூா் அருள்மிகு பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த மாதம் 25-ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, 16-ஆம் தேதி யாக சாலை வளா்க்கப்பட்டு, லட்சுமி, நரசிம்ம சுதா்ஷன ஹோமங்கள், விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து 17-ஆம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. 19-ஆம் தேதி புண்யாஹவாசனம், காலசந்தி திருவாராதனம், அதிவாசத்ரய ஹோமம், வேதவிண்ணப்பம், சாற்றுமறை நிகழ்வு நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பிரதான ஹோமம், மகாபூா்ணாஹுதியும், காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை திருகுடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வும் நடைபெற்றன. இதையடுத்து விசேஷ திருவாராதனம், வேத விண்ணப்பம், பிரம்மகோஷம், சாற்றுமறை, தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சா்கள் பங்கேற்பு: வெள்ளிக்கிழமை முதல் 45 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது. திருக்குடமுழுக்கு விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அமைச்சா் தா.மோ.அன்பரசன், அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் ரேணுகா தேவி மற்றும் ராஜம், வெங்கடேச பட்டாச்சாரியாா், திருக்கோயில் பட்டாச்சாரியாா் பாா்த்தசாரதி, திருக்கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.