முகப்பு
தமிழ்நாடு

9 மாவட்டங்களுக்கு பாரத் நெட் திட்டம்: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 9 மாவட்டங்களில் பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 9 மாவட்டங்களில் பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமாகின.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளை கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியாக நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சாா்பில் ரூ.1,815.32 கோடியில் கண்ணாடி இழை கம்பிவடத் திட்டம் செயலாக்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டமானது நான்கு தொகுப்புகளாகப் பிரித்துச் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு தொகுப்பிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஏற்கெனவே, ஏ, சி மற்றும் டி ஆகிய மூன்று தொகுப்புகளில் உள்ள மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தொகுப்பு பி-இல் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமாகின. விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூா், அரியலூா், கடலூா், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3001 ஊராட்சிகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட அகண்ட அலைக்கற்றை சேவை அளிக்கப்படும் என அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமப்புறங்களுக்கும் குறைவான விலையில் தரமான டிஜிட்டல் சேவைகள் அளித்திட முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணைய வழி கல்வி, தொலைமருத்துவம் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடும் நிகழ்வில், கண்ணாடி இழை வலையலைப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எ.கே.கமல்கிஷோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →