முகப்பு
தமிழ்நாடு

எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள்?- கார்த்தி சிதம்பரம் கேள்வி

புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயச்சி செய்வதாகவும், எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:


புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயச்சி செய்வதாகவும், எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 2011-இல் பஞ்சாபில் உள்ள தல்வண்டி சாபோ எரிசக்தித் திட்டத்தை நிறுவும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசம் கடந்ததால், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளர்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது.

ஆனால், இந்தியாவின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் கூடுதலாகப் பணியாளர்களை அழைத்துவர முடியவில்லை.

அதையடுத்து, அந்த நிறுவனம் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகியது. 

விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளர்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக கார்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டரும் தல்வண்டி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டவருமான எஸ்.பாஸ்கர ராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ, கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.

ஆனால், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பிரிட்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், சிபிஐ அழைப்பாணைக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், பிரிட்டனிலிருந்து நாடு திரும்பவும், திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

அதனடிப்படையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆஜரானார். 

"அவரிடம் மாலை 6 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். பிற்பகலில் ஒரு மணி நேர இடைவேளை அளித்தனர்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து 3 ஆவது நாளாக நேற்று சனிக்கிழமை கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், விசாரணை முடிந்து தில்லியில் இருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது என்னிடம் 27 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது என்னிடம் என்ன கேள்வி கேட்டனர் என்பதை வெளியிடாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம், என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்தவொரு சீனருக்கும் விசா பெற்றுத் தர உதவவில்லை. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள்.  

சோதனை எனக்கு புதிதல்ல. எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள். புலன் விசாரணை என்ற பெயரில் மன உளச்சலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.  என் தந்தை சிதம்பரம் வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகிறார்கள் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →