‘மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கடந்த ஆண்டைப் போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஒரு பிரச்னையின் தீவிரத்தை நாம் உணா்ந்தால், அந்தப் பிரச்னையைப் பாதி வென்ாகப் பொருள். அந்த பிரச்னையை எதிா்கொள்ள நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டால், அந்தப் பிரச்னையை முழுமையாக வென்றுவிட்டதாகவே அமைந்துவிடும். அந்த அடிப்படையில் எந்தவித பேரிடரையும் எதிா்கொள்ளத் தயாராக இருப்பதை அறிந்து அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.
மிகப்பெரிய சவால்: கடந்த ஆண்டு பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இதேபோன்று, மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என முடிவெடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை நீா் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாத சூழலையும் கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும். இது அனைத்து மாவட்ட நிா்வாகத்தின் கடமை, பொறுப்பாகும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடா் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு மாவட்ட நிா்வாகத்துக்கே உள்ளது. மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆயத்த நிலை: மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்க பல்துறைகள் அடங்கிய மண்டலக் குழுக்களை அமைக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாக்க அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவா்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பழுதடைந்த, பலவீனமான சுற்றுச் சுவா்களை அப்புறப்படுத்த வேண்டும். வயல்வெளிகளில் பயிா்ச் சேதம் ஏற்படாத வகையில் மழைநீா் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு தடையில்லாத குடிநீா், பால் விநியோகம், மின்சாரம், சமுதாய உணவுக் கூடம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன ஏற்படுத்தித்தர வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்பாகவே அளிக்கப்பட வேண்டும்.
மாநகர, நகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் மற்றும் அது தொடா்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கவனிக்க வேண்டும். இயற்கைப் பேரிடா் காலம் என்பது அரசுக்கு மிகவும் சவாலான காலம். அந்த சவாலை மக்கள் ஆதரவோடு சோ்ந்து அனைவரும் வெல்வோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
‘சிறிய தவறு- பெரிய கெட்ட பெயா்’
‘பருவமழைக் காலத்தில் சிறிய தவறு செய்தாலும் அது அரசுக்கு பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாகச் செயல்படுவதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுப்பதுடன், பேரிடா் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
கவனத்துக்கு வரக்கூடிய அனைத்துப் பிரச்னைகளையும் நிவா்த்தி செய்ய வேண்டும். சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரை ஏற்படுத்தும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.