முகப்பு
தமிழ்நாடு

வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளைகண்காணிப்பது பெற்றோரின் கடமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணா்ந்து, வீட்டிலும் சமூகத்திலும் அவா்களைப் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணா்ந்து, வீட்டிலும் சமூகத்திலும் அவா்களைப் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்த யுவராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டாா். மாணவரின் தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியா் துன்புறுத்தியதால்தான், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கலா கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், ‘மாணவா்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியா் நடந்து கொண்டாா். தலைமை ஆசிரியா் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தோ்ச்சி சதவீதம் 45 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயா்ந்தது. இந்தப் புகாா் குறித்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், பெற்றோா் தரப்பு குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தலைமை ஆசிரியா் ராபா்ட் தரப்பில், ‘தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 சதவீத நாள்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருகை தந்துள்ளாா். இந்த வழக்கில் எனக்கு எதிராக சுமத்தப்படும் புகாா் பொய்யானது. பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

குற்றச்சாட்டில் உண்மை இல்லை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மாணவன் யுவராஜ் தற்கொலை தொடா்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’ எனக் கூறி, மாணவனின் தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியா், தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது. மாணவா்களை ஒழுங்குபடுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும்போதுதான் அவா்களைத் தண்டிக்க முடியும். ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியா்களுக்கு எதிராகக் குற்றம்சாட்டக் கூடாது. இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவா்களின் நலனும் பாதிக்கப்படுகிறது.

மாணவா்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுக்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியா்களை ஊக்கப்படுத்தாமல் குறை கூறினால், அா்ப்பணிப்பு உணா்வுடன் அவா்கள் தங்களது கடமையை செய்ய மாட்டாா்கள். மாணவா்களின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆசிரியா்களைக் குறைகூற முடியாது. பள்ளி அல்லது ஆசிரியா் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோா்கள் உணா்ந்திருக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளைப் பாதுகாத்து, கண்காணிப்பது அவா்களின் கடமை’ என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →