ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டம்: பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாவூர்சத்திரத்தில் சனிக்கிழமை காலை அதிமுக சார்பில் உண்ணாவிரதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாவூர்சத்திரம்: ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாவூர்சத்திரத்தில் சனிக்கிழமை காலை அதிமுக சார்பில் உண்ணாவிரதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றிய தென்பகுதி கிராமங்களின் 48 ஆண்டு கால கனவுத் திட்டமான ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப்பணி கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியால் ரூ. 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணியும் தொடங்கியது.
2021இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த 18 மாதங்களாக இப்பணி நடைபெறாததைக் கண்டித்தும், இதேபோல் கடந்த ஆட்சிக் காலத்தில் மண் பரிசோதனை, திட்ட மதிப்பீடு நிறைவு பெற்ற ரெட்டைகுளம் முதல் ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் திட்டத்தினையும் தற்போதைய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளதைக் கண்டித்தும், இந்த இரு திட்டப்பணிகளையும் உடனடியாக தொடங்கி நிறைவேற்றிட வலியுறுத்தி, அதிமுக சார்பில் பாவூர்சத்திரத்தில் சனிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் சாமிநாதன், ஒன்றியச் செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், சங்கரபாண்டியன், குற்றாலம் பேரூராட்சித் தலைவர் கணேஷ் தாமோதரன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.