அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேற்றம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
கடந்த 15 மாதங்களில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை: கடந்த 15 மாதங்களில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள டைடல் பூங்கா வளாகத்தில் தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில்துறைகளில் உலகளவில் தமிழ்நாடு கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தைத் தேடி வருகின்றன என்றார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2022) சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு“ எனும் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாட்டில் ஆற்றிய உரையில்,
கடந்த பதினைந்து மாத காலமாகத் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை எனக்கு முன்னாலே உரையாற்றிய அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தொழில் துறையானது மிகவேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவிலான கவனத்தை மட்டுமல்ல - உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக 51.4 விழுக்காடாக உள்ளது. திறன்மிக்க பணியாளர்களை நமது மாநிலம் பெற்றுள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக் கொள்வதோடு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, உற்பத்தித் துறையைவிட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை நாம் பெற்றிட முடியும்.
எனவேதான், நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சி (Industry 4.0) தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக் கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும்.
தொழில் வளர்ச்சி - 4.0 தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும் என்று குறிப்பிட்டார்.