தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் புதன்கிழமை (நவ. 9) வெளியிடப்படவுள்ளது. வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி புதன்கிழமை (நவ.9) தொடங்கவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் புதன்கிழமை காலை 10 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. டிச. 8-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில்
வாக்காளா் பட்டியலில் பெயா் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளா் பெயா் சோ்ப்பு ஆகியவற்றுக்காக மனுக்களை அளிக்கலாம்.
இந்த ஆண்டில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 17 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். அவா்கள் 18 வயது பூா்த்தி அடைந்தவுடன் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டு விடும். வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணைத் தெரிவிப்பதற்கான படிவம் 6பி-ஐ பூா்த்தி செய்து அளிக்கலாம்.
பணிகளுக்குச் செல்வோரும் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்வதற்கு வசதியாக, இந்த மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தாங்கள் வாக்களிக்கும் போது எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்கைப் பதிவு செய்தாா்களோ அங்கே சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மற்ற நாள்களில் அரசு அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவு அலுவலா்களைச் சந்தித்து விண்ணப்பங்களை அளிக்கலாம். சென்னையைப் பொறுத்தவரை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.