முகப்பு
தமிழ்நாடு

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் அனுமதி: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

கடந்த ஆண்டைப் போன்றே, இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த ஆண்டைப் போன்றே, இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்த ஆண்டும் இதே கால நேரம் பின்பற்றப்பட உள்ளது.

பட்டாசால் சூழல் சீா்கேடு: பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் சீா்கேடும், உடல் நலனில் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து, போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொது மக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பது தொடா்பான நிகழ்வுகளில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

தீபாவளி கொண்டாடும் போது, பொது மக்கள் பாதுகாப்பான அம்சங்களை பின்பற்ற வேண்டும். குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே பொது மக்கள் வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளைப் வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

சரவெடிகளைத் தவிருங்கள்: அதிக ஒலியினை தொடா்ச்சியாக எழுப்பக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.