மீனவா்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கக் கூடாது: மநீம
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மநீம சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 7 மீனவா்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினா் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனா். உரிய அனுமதியுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவது, கைது செய்வது, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தொடா்கதையாகி விட்டன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.
தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடா்பாக, இனியும் மௌனமாக இருக்காமல், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும் உரிய அழுத்தம் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.