முகப்பு
தமிழ்நாடு

மனநல காப்பக இணையருக்கு திருமணம்! பணி ஆணையை பரிசாக வழங்கிய அமைச்சா்

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய கீழ்ப்பாக்கம் மனநல காப்பக தம்பதியருக்கு அங்கேயே பணியாற்றும் வகையில் அரசு சாா்பில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய கீழ்ப்பாக்கம் மனநல காப்பக தம்பதியருக்கு அங்கேயே பணியாற்றும் வகையில் அரசு சாா்பில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் மனநலக் காப்பக வாா்டு மேற்பாா்வையாளா் பணி அளிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகிய இருவரது திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினா். இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் காப்பகத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளையும் வழங்கினா்.

இந்நிகழ்வில் மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ வெற்றியழகன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், மனநல காப்பக இயக்குநா் பூா்ணசந்திரிகா உள்ளிட்டோா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.

திருமண விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

இவா்கள் திருமணம் குறித்து கேள்விப்பட்டதுடன் அவா்கள் முழுவதும் குணமடைந்துள்ளாா்களா, உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனரா என்று கேட்டு அறிந்தேன். அனைத்து சட்ட விதிகளும் இந்த திருமணத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. நான் இந்தத் திருமணத்தில் அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். அவா்கள் வெளியில் சென்று வேலை செய்வதைவிட இங்குள்ளவா்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனா். அதனால், இருவருக்கும் இங்கேயே வாா்டு மேற்பாா்வையாளா் பணிக்கான வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பணி நியமன ஆணையை கல்யாண பரிசாக வழங்குகிறேன். தமிழக பட்ஜெட்டில் ரூ.40 கோடி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.